சிலப்பதிகாரத்தில் திருநங்கையர்

முனைவர் கி. அய்யப்பன்

 

முன்னுரை

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். இக்காப்பியம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இளங்கோவடிகள் எழுதிய இக்காப்பியத்தில், சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் திருநங்கையர் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம் திருநங்கையரை ஆண்மை திரிந்த, பேடி என்ற சொற்களால் அடையாளப்படுத்துகிறது. மேலும்,  இக்காப்பியம் மதுராபதி தெய்வம் இருபால் தன்மை கொண்டதாகவும் பதிவு செய்கிறது. இவ்வாறு சிலப்பதிகாரத்தில் திருநங்கையர் குறித்த பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.



பேடி

 பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின் குறிப்புரை கூறுகின்றது. இதன் மூலம் பேடி என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள முடியும்.

 

அரவாணி- திருநங்கை

அரவாணி என்னும் பெயர் 12-05-1997 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயரை வைத்தவர் ஆர். இரவி அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். திருநங்கை எனும் பெயர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களால் 2006ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

திருநர்

   இப்பெயர்களும் மாறி தற்போது ஆணாய் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரை திருநங்கை என்றும், பெண்ணாய் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரை திருநம்பி என்றும் அழைக்கின்றனர். திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 இந்த புரிதலை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்  பேடி என்ற சொல் ஆணாகப் பிறந்து பெண்தன்மையுடன்  வாழும் திருநங்கையரைக் குறிக்கும் என்பது தெளிவு.

திருநங்கை வடிவத்தில் எமன்

தொல்காப்பித்தில் திருநங்கையரைக் குறிக்கும் ஆண்மை திரிந்த(தொல்.சொல்.நூ.4)  என்ற சொல், சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில்  எமன்  தன் கொலைத் தொழிலை மாற்றிக் கொள்ளாத குணங்களோடு பெண்ணுருவம் தாங்கி  இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்

ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது

நாணுடைக் கோலத்து நகைமுகங் கோட்டிப்

பண்மொழி நரம்பின் திவவியாழ் மிழற்றிப்

பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென

(இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, பா. அடிகள்:219-223)

பல உயிர்களைக் கவரும் பிளந்த வாயினை உடையவன் எமன், அவன்  தன் ஆண் இயல்புகளை மாற்றிக்கொண்டு, தன் கொலைத் தொழிலை மாற்றிக் கொள்ளாமல். நாணமுடைய கோலமும் நகையுடைய முகமும், பண் மொழிகின்ற நரம்பினையுடைய  திவவுயாழ் போலப் பேசிக்கொண்டு, பெண்ணுருவம் தாங்கி புகாரில் திரிகின்றான்  என்று இப்பாடல் வரிகள் சொல்கின்றன. இதன் மூலம்  எமன் ஆணுக்குரிய குணங்களோடு பெண்ணுருவம்  தாங்கி இருந்ததை திருநங்கை வடிவம் என்று  தீர்மானிக்க முடிகிறது.

பேடியாடல்- கூத்துவகைகளில் ஒன்று

கூத்து வகைகளில் ஒன்றான பேடியாடல் திருநங்கையர் மட்டுமே ஆடக்கூடிய கூத்தாக  இருந்திருக்கிறது. இப்பேடியாடல் கூத்து பற்றி சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.

“ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்

காமன் ஆடிய பேடியாடலும்”

(கடலாடுகாதை, பா. அடிகள்:56-57)

கடலாடு காதையில் ஆடல்வல்ல மாதவி தாளமுறை கெடாமல் தாளகதியுடன் கொடுகிட்டி ஆட்டம் முதற்கொண்டு பதினொரு வகை ஆடல்களை நிகழ்த்திக் காட்டுகின்றாள்.  அதில் ஒரு வகை ஆடலாக பேடியாடல் அமைகின்றது. ஆண் தன்மையை இழந்து பெண்தன்மை பெற்றக் கோலத்துடன் மன்மதன் ஆடிய பேடிக் கூத்தை மாதவி நிகழ்த்திக் காட்டுகின்றாள்.

 


 

இதன்மூலம் காமன் தன்மகனைச் சிறைமீட்டு ஆண்தன்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு பேடியாக(திருநங்கையாக) இருந்து பேடிக்கூத்தினைக் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகப் பேடிக்கூத்தினைக் காமனோடு தொடர்பு படுத்திப் பார்க்கப்படுகிறது. இவை புராணக் கதைகள் சொல்வனவாகும். பேடிக்கூத்து என்பது பிற்காலத்தில் தான் இறைவனைக் குறித்து நிற்கிறது. அதற்கு முன்னர் பேடிகளால் மட்டுமே இக்கூத்து நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எனவேதான் அக்கூத்திற்கு பேடிக்கூத்து என்ற பெயர் வந்திருக்கவேண்டும் என்று கூறமுடியும்.

மதுராபதி தெய்வம்- இருபால் கூறு உடையது

பாண்டியர்களின் குலதெய்வமான மதுராபதி தெய்வத்தின் உருவமைப்பு ஆணும் இல்லாத பெண்னும் இல்லாத திருநங்கையர் வடிவினை ஒத்துள்ளதாக சிலப்பதிகாரத்தின் கட்டுரைக்காதையில் இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்.

“வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்

இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்

வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்

வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்

தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக்

கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்

பொற்கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன்

குலமுதல் கிழத்தி”

 (கட்டுரைக் காதை, பா.அடிகள்:6-13)

மதுரைக்காண்டத்தில் கட்டுரைக்காதையில் கண்ணகி மதுரையை எரித்தப்பின் அவள் பின்புறம் தோன்றி அவளுக்கு முன்னர் நடந்த முற்பிறவிக் கதையைச் சொல்லும் தெய்வம் மதுராபதியாகும். 


இந்த மதுராபதி தெய்வம் இருபால் கூறுடையது.  இடது கையில் தாமரை மலரும், வலது கையில் கொடுவாளும், வலது காலில் வீரக்கழலும், இடது காலில் ஒலி செய்யும் ஒற்றைச் சிலம்பும் அணிந்து காட்சி அளிக்கிறார். மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் குலதெய்வம் மதுராபதி.  இத்தெய்வம் இருபால் தன்மை அமைந்த திருநங்கையர் வடிவமாக இருப்பதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

திருநங்கையர் உருவ அமைப்பு

வஞ்சிகாண்டத்தில் நீர்படைக் காதையில் சேரன் செஞ்குட்டுவன் பத்தினி தெய்வம் கண்ணகிக்குக் கல் எடுத்ததை பதிவு செய்கிறது. தமிழரின் வீரத்தை நிலைநாட்டவும் வடதிசை நாடுகள் மீது படையெடுத்துச் சென்று கனகவிசய மன்னர்களைத் தோற்கடித்து இமயத்தில் கல்லெடுத்து கங்கை ஆற்றில் நீர்ப்படை செய்து தென்திசை நோக்கித் திரும்புகின்றான். அவ்விடத்தில் ஆரியப் பேடிகள் என்ற திருநங்கையர் உருவ அமைப்பு விரிவாக பேசப்படுகிறது.

“சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்

அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண்

விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்

சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள்

வளரிள வனமுலை தளரியல் மின்னிடைப்

பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு”

 (நீர்படைக் காதை, பா.அடிகள்: 181-186)

என்ற பாடலில் போர்க்களத்தில் தவவேடம் பூண்டு தப்பியோடிய அரசர்களையும் கறுத்த கூந்தலும் செவ்வரி படர்ந்த பெரிய கெண்டை மீன் போன்ற கண்களும் வெண்சங்கு தோடணித்தவர்களும் வெள்ளைப் பற்களும் சிவந்த வாயும் கைவளையல் அணிந்த கைகளும் அசையும் மூங்கில் போன்ற தோளும் அழகிய இளமார்பும் மின்னல் இடையும் பாடகம் என்னும் காலணி அணிந்த ஆரிய திருநங்கையர்களையும் கைது செய்து சேரனின் வீரம் குறித்துச் சோழ பாண்டிய மன்னர்கள் அறிந்திட அனுப்புகின்றான் என்று கூறப்படுகிறது.

அரசி வேண்மாளின் அந்தப்புர காவலராக திருநங்கையர்

சிலப்பதிகாரத்தில் திருநங்கையர் குறித்து நடுகல் காதையில் மேலும் ஒரு பதிவு காணப்படுகிறது. இதில் திருநங்கையரும்  அரசி வேண்மாளின் அந்தப்புர பணிப்பெண்களில் ஒருவராக இருந்துள்ளனர் என்ற குறிப்பிடத்தக்க பதிவைக் காணமுடிகிறது.

 

“மான்மதச் சாந்தும் வரி வெண் சாந்தும்

கூனும் குறளும் கொண்டன ஒருசார்

வண்ணமும் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்

பெண் அணிப் பேடியர் ஏந்தினர் ஒருசார்”

(நடுகல் காதை, பா. அடிகள்: 56-60)

என்ற பாடலில் செங்குட்டுவனின் மனைவியும் அரசியுமான வேண்மாள், வெண்ணிலா காணுவதற்கு நிலாமுற்றும் வருகின்றாள்.  ஒளிவீசும் வளையல் அணிந்த பணிப்பெண்கள் மங்கல விளக்கை எந்தி வாழ்த்துகின்றனர்.  ஒருபக்கம் மத்தள ஒலியும் யாழிசையும் பண்ணமைத்துப் பாடும் பாடல் முழக்கமும் மிகுந்திருக்கின்றன. கஸ்தூரிக் குழம்பையும் தொய்யில் எழுதும் வெண்சந்தனத்தையும் கூனரும் கள்ளரும் ஏந்தி நிற்கின்றனர். அப்போது பெண்போல் அழகுடைய திருநங்கையர் சுண்ணப்பொடிகளையும் வாசமலர் மாலைகளையும் ஏந்தி நிற்கின்றனர். என்று கூறுவதின் மூலம் திருநங்கையர் அரண்மனை அந்தப்புரங்களில் அரசிக்குப் பணிவிடைகள் செய்பவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

முடிவுரை

இக்கட்டுரையின் வாயிலாக சிலப்பதிகாரமானது இவர்தான் திருநங்கையராக இருந்தார் என்று எந்த ஒரு நபரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை என்பது  தெளிவாகிறது. தொல்காப்பியர் திருநங்கையரை ஆண்மை திரிந்த என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது போன்றே இளங்கோவடிகளும்  ஆண்மை திரிந்த எனும் இச்சொல்லால் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.

ஆனால்  சிலப்பதிகாரம் திருநங்கையர் மட்டுமே ஆடக்கூடிய பேடிக் கூத்தினைப் பற்றி பேசுகிறது. மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் குலதெய்வம் மதுராபதி இருபால் தன்மை அமைந்த திருநங்கை வடிவமானது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. திருநங்கையரின் உருவ அமைப்பை மிகச் சிறப்பாக இக்காப்பியம் பதிவு செய்துள்ளது. செங்குட்டுவனின் மனைவியும் அரசியுமான வேண்மாளுக்கு அந்தப்புரத்தில் பணிவிடை செய்யும் பணிப்பெண்களாகவும் திருநங்கையர் பணிசெய்துள்ளனர். இதன் மூலம் திருநங்கையர் அரசனின் நம்பிக்கைக்கு உரியர்வர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

எனவே சிலப்பதிகாரமானது திருநங்கையரை நம்பிக்கைக்குரிய ஒருவராக பதிவு செய்கிறது. மேலும், அவர்களை தெய்வ வடிவில் வழிப்பட்டமையும், அவர்களின் உருவ அமைப்பையும் பதிவு செய்வதின் மூலம் அன்றைய சமூகம் வேறுபாடு இன்றி திருநங்கையரை சகமனிதராக மதித்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

துணைநூற் பட்டியல்

தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், கழக வெளியீடு, சென்னை. 1956,

சோமசுந்தரனார். பொ.வே.,(உரை), சிலப்பதிகாரம், கழக வெளியீடு, சென்னை. 1979

 

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இடக்கை நாவலில் திருநங்கை சித்திரிப்பு