இடக்கை நாவலில் திருநங்கை சித்திரிப்பு

 

இடக்கை நாவலில் திருநங்கை சித்திரிப்பு

-----முனைவர் கி. அய்யப்பன்

சமகாலத்தில் இருக்கும் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன்.  அவரது சமீபத்திய நாவலான இடக்கை இதுவரை தமிழ் இலக்கிய உலகம் கடக்காத, பேசாத ஒரு பெருவெளியை பேசுகிறது. சாதாரண எளிய விளிம்பு நிலை மக்கள் மீதான ஒடுக்குமுறைகளின் வரலாறு இப்பெரு நிலத்தில் இதுவரை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. மன்னர்களின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவிற்கு மக்களின் வாழ்க்கை வரலாறு ஏடுகளில் இடம் பெற்றதில்லை. அப்படி விளிம்பு நிலை மக்கள் மீது அதிகாரத்தின் கரங்கள் செலுத்துகிற அடக்குமுறைகளைப் பற்றியும், மன்னராட்சி காலத்தின் விசித்திர ஒழுங்குகள் குறித்தும் தனது இடக்கை நாவலில் எஸ். ராமகிருஷ்ணன் தனக்கே உரிய குறியீட்டு உத்திகளுடன் பதிவு செய்கிறார்.




இடக்கை கதைச் சுருக்கம்

இடக்கை நாவல் சமூகத்தின் இடது கையாக, இடப்புறமாக ஒடுக்கப்படுகின்ற விளிம்பு நிலை மக்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரைப்பற்றி விரிவாக பேசுகிறது. மனித உடலில் ஒரே அளவிலான, வண்ணத்திலான, வடிவத்திலான இரு கைகள் இருக்கின்றன. ஆனால் வலது கைக்கு தருகிற முக்கியத்துவம், வலது கைக்கு கிடைக்கிற மரியாதை, சமூக அங்கீகாரம் எதுவும் இடக்கைக்கு கிடைப்பதில்லை. இதில் இடக்கை எந்த தவறையும் செய்வதில்லை. ஆனால் வலக்கையோ கொலை செய்கிறது. லஞ்சம் வாங்குகிறது. இவ்வாறு எல்லா தவறுகளையும் செய்கிற வலது கை தான் மானுட வாழ்வின் பிரதானமாக விளங்குகிறது. தீண்ட தகாத சாதியாக கருதப்பட்ட சாமர்கள் ஏன் வலக்கை பயன்படுத்துவதில்லை என்பதற்கு கூட புராண கதையாடல் ஒன்று இந்நாவலில் காணப்படுகிறது. எனவே நாவல் முழுக்க சமூகத்தில் இடது புறத்தில் இருந்து எழும்பும் குரல்கள் ஒலிப்பதால் இடக்கை என பெயர் சூட்டப்பட்டிருப்பது மிக பொருத்தம் எனலாம். இந்நாவலில் தூமகேது, திருநங்கை அஜ்யா பேகம் ஆகிய இரண்டும் முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகின்றன.

நாவலின் முக்கிய கதாபாத்திரமான தூமகேது சிறுபான்மை இனத்தில் பிறந்து ஒளரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குள் உட்படும் சிற்றரசனான பிஷாட மன்னன் ஆளும் சத்கர் மாநிலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் ஆட்டுத்தோலைத் திருடினான் என்ற பொய்யான குற்றம் சாட்டப்பட்டு காலாச் சிறையில் தள்ளப்படுகிறான். இவனுடைய ஏழ்மையும், பிறந்த சாதியும், இவனுக்கெதிராக அத்துனை சாட்சியங்களையும் வரவேற்கிறது. சிறையினுள் அவனுக்கு பெரும்பான்மை சாதியினரால் ஏற்படும் சொல்ல முடியாத துயரத்தின் விளிம்பில் அதே உயர்நிலை சாதியன் ஒருவரின் உதவியால் தன்னை சிறையிலிருந்து விடுவித்து புதிய மனிதனாய் பரிணமிக்க உதவுகிறார். அதன் பிறகான அவனது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில் சிரமமாகக் காட்டியிருந்தாலும் சாதியினடிப்படையிலான துயரம் கொண்டதாய் இல்லாமல் நகர்ந்து அவனது குடும்பத்தை காண இயலாமல் ஒடுங்கும் நேரத்தில் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகான அரசியல் மாற்றங்களும், அவன் குடும்பத்தைத் தேடி உயிரை ஒடுக்கலாம் எனும் கட்டத்தில் அந்நகரில் நடக்கும் தர்கா ஊர்வலத்தில் கிடைக்கும் நீரும் உணவும், ஒளரங்கசீப்பின் குல்லாவும், சாமந்திப் பூ மாலையுமாய் கதை முடிகிறது. தர்காவை நோக்கிய பயணம் அவனுக்கான புதிய ஆரம்பக் குறியீடாக இருக்கலாமோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

திருநங்கை

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாவலின் முதல் அத்தியாயத்தில் இந்து ஸ்தானத்தின் ஏகசக்ரவர்த்தி ஒளரங்கசீப்பின் அந்திமக்காலம் பற்றி விவரிக்கிறார். 89 வயதை எட்டிய போதிலும் போகம், பொழுதுபோக்கு என்று மூழ்கிய, வெற்றிகளையே சாதித்து, அதிகார போதையில் தவழ்ந்து கிடந்தவர். வயது தள்ளாமை, நோய் என்று வந்திட்டபோது மன்னர் தன்னைப் பற்றி, தன் கடந்த காலத்தைப் பற்றி, தன்னோடு தான் பேசிக் கொள்ளுவது, அஜ்யா பேகத்தோடு செய்த விவாதம், மரணத்தைப் பற்றி அறிந்துகொள்ள இபின் முகைதீன் என்ற சூபி ஞானியிடம் செய்த தர்க்கம் இவைகளை நூலாசிரியர் எழுதுகிறபோது கருத்தாழத்தோடு வாழ்க்கையின் கூறுகளை தத்துவங்களோடு இணைத்து எழுதுகிறார்.

நாவலில் கவனிக்க வேண்டிய பாத்திரங்களில் ஒன்றாக உள்ளது திருநங்கையும், மஹல்தாருமான அஜ்யா பேகம் என்பவர்தான். இந்த அம்மையார் மாமன்னன் ஒளரங்கசீப்பின் அரங்கப் பணியாளராக 26 ஆண்டுகள் பணி புரிந்து வந்தார். மேலிடத்து உறவு கத்திமேல் நடப்பதுபோல், கொஞ்சம் தவறினால் வாழ்வு முடிந்துவிடும். தப்பினார். ஆனாலும் மாமன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அஜ்யா பேகம் மன்னர் இறந்து, அதிகாரம் மாறிய அதே இரவில் செய்யாத குற்றங்கள் சுமத்தப்பட்டு காராகிரகத்தில் வைக்கப்பட்டார்.

அஜ்யா பேகத்தை போல வரலாற்றில் நிறைய திருநங்கைகள் அரசனுக்கு நெருக்கமாக இருந்து அவருக்காக உயிர்விட்டிருக்கிறார்கள். ஆனால் அஜ்யா பேகத்தை போல எவரும் மனசாட்சியை கேள்விகேட்பவர்களாக உருவாக்கபடவில்லை. தனக்குக் கிடைத்த சிறைதண்டனை பற்றி அஜ்யா பேகம், வாழ்க்கையில் அடிபட்டு ஒரு முதிர்ந்த பக்குவமடைந்த நபரைப் போல்தான் சிந்திக்கிறாள். “மாமன்னரின் அந்தரங்கப் பணியாளராக இருப்பது சாவோடு தோழமைக் கொள்ளுவது போலத்தான்”. “ஆனால் சாவு என்ன செய்துவிடும்? வாழ்வின் சிரமங்களை விடவா சாவு கொடுமையானது! எத்தனை அவமானங்களை, வலி, வேதனைகளைக் கடந்ததாகிவிட்டது. இனி என்ன நடந்துவிடப் போகிறது”? ஒளரங்கசீப் விஷயத்தில் அஜ்யா பேகத்தை அவரை விளையாட்டுச் சிறுவனைப் போல நினைத்தாலும், மறு நிமிடமே அவர் செய்த குற்றங்கள், மன்னிக்க முடியாத குற்றங்கள் அவளது நினைவுக்கு வந்து போகின்றன. ஒளரங்கசீப்பின் மகன் உத்தரவால் சாவை எதிர்நோக்கி சிறையில் அடைக்கப்பட்ட அஜ்யா பேகத்தின் கடந்தகால நினைவு அலைகள் எப்படி எழுவதும் விழுவதுமாக இருந்தன என்பது சுவாரஸ்யமான ஆனால் சோகமும் தோய்ந்த செய்தி. எத்தனையோ இரவுகள், பகல்கள் உறங்காமல் மாமன்னின் கால்களைப் பிடித்து விடுகிறாள் அஜ்யா பேகம், எத்தனையோ முறை பேரரசர் அவளோடு ஒன்றாக உணவருந்த செய்திருக்கிறார். சகோதரி என அழைத்து பரிசுகள் வழங்கியிருக்கிறார். அஜ்யா பேகத்தை விட பேரரசர் வயதில் மூத்தவர், பிடிவாதமான கிழவர் என்றுகூட நினைப்பதுண்டு, சில நேரங்களில் “அஜ்யா”(ப.51) எனக் கூப்பிடுவார். சில நேரங்களில் “மகளே”(ப.51) என்று கூட அழைத்தார். பின்னர் சகோதரி (ப.107) என்று கூட அழைத்தார். மன்னர் தனிமையில் சில நேரங்களில் கண்ணீர்விட்டு அழுவதுண்டு. அதை அஜ்யா பேகம் கவனித்ததுண்டு. ஆனால் அந்த கண்ணீரைத் துடைக்க துணிவு இருந்ததில்லை. திருநங்கைக்கு அந்த உரிமை கிடையாது. ஒளரங்கசீப்பிற்கும் அஜ்யா பேகத்திற்குமான உரையாடல் உணர்வுபூர்வமானது.

“மாமன்னரே, இந்த உலகில் யாருக்கும் கிடைக்காத இடம் எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் மனத்தின் மூலையில் இந்த ஏழை அடிமைக்கு ஓர் இடம் தந்ததைவிட வேறு என்ன பரிசு கிடைத்துவிடப் போகிறது? எனக்கென யாரும் இல்லை. இந்த உலகம் என்னை பரிகாசம் செய்தது. அவமானப்படுத்தியது. உங்கள் நிழலுக்கு வந்த பிறகுதான் நான் சந்தோஷங்கொள்ளத் துவங்கினேன்”. “அஜ்யா உனக்கு எதன் மீதும் ஆசையில்லையா”? “இருந்தது. அந்த வயதைக் கடந்துவிட்டேன். இப்போது எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டுமே உள்ளது.” “சொல் உடனே நிறைவேற்றிவைக்கிறேன்”.

“உங்கள் கைப்பட எனக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதித்தர வேண்டும். ஆயிரம் ஆயிரம் உத்தரவுகளை, ஆணைகளை, கொடைகளை எழுதிய உங்கள் கைகள் என் பெயரை ஒருமுறை எழுத வேண்டும். அந்தக் கடிதத்தை என் உயிர் உள்ளவரை பாதுகாத்து வைத்துக்கொள்வேன். “ அஜ்யா கடிதம் என்ன? என் உயிலில் உன்னைப்பற்றி எழுதிவிடுகிறேன். நீ இல்லாமல் என் இறுதிக் காரியம் நடக்காது. என் கைப்பட குரான் எழுதிக் கிடைத்த வருவாயை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில்தான் என் சவத்துணி வாங்கப்பட வேண்டும். என் பெயர் உலகில் வாழும் காலம் வரை நீயும்  இருப்பாய். இப்போதே அந்த ஆணையை எழுதிவிடுகிறேன்”. அவ்வாறே சிப்பந்தியை அழைத்து இந்த விஷயம் பதிவு செய்ய ஏற்பாடாகிவிட்டது. அஜ்யா கண்ணீர்மல்க நன்றி சொன்னாள். நெஞ்சம் நெகிழ மாமன்னர் சொன்ன வார்த்தைகள், “அஜ்யா இந்த உலகம் பெண்களின் அன்பால்தான் உயிர்ப்புடன் உள்ளது. அந்த அன்பை உணராத ஆண்களில் நானும் ஒருவன்”. நாவலை படித்து முடித்தபிறகு அஜ்யாவின் துயரம் நம்மை வெகுவாக பாதிக்கிறது. அவளுக்காக நாம் வருந்துகிறோம். மறக்கமுடியாத கதாபாத்திரமாக அவள் மனதில் தங்கிவிடுகிறாள்.

மன்னனின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவள், சிறையில் அடைக்கப்படக் காரணம், ஒளரங்கசீப்பின் மகன் இளவரசன் முகமது ஆஜம் அவளைக் கடுமையாக வெறுத்தான். அவள் ஓர் அடிமைப்பெண். அவள் மீது என் தந்தை வைத்திருந்த நம்பிக்கையைக் கூட என் மீது வைத்திருக்கவில்லையே என்கிற கோபம். அவள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு இது மட்டுமல்ல காரணம். ஒளரங்கசீப் கடைசியில் எழுதி வைத்த உயிலும் அதற்குக் காரணமாக இருந்தது. அந்த உயிலில் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற மர்மம் கதையை சுவாரஸ்யமாக முன்னெடுத்துப் போகிறது. சிறையில் அடைக்கப்பட்ட  அஜ்யா பேகத்திற்கு” தன்னைத் தூக்கிலிடப் போகிறார்கள். இன்னும் சில நிமிடங்கள்தான் வாழ்க்கை. யாரை நினைத்துக் கொள்வது? யாருக்கு நன்றி சொல்வது? அவள் தன் தாயை நினைத்துக் கொண்டாள். ராதா சிற்பத்தை, தன்னை நேசித்த தர்ஷனை, அடைக்கலம் தந்த உத்யபூரியை, தன்னை நினைத்த பாதுஷாஒளரங்கசீப்பை நினைத்துக்கொண்டாள். அவள் அறியாமல் கண்ணீர் வந்தது. பெருமூச்சிட்டபடியே அல்லாவிற்கு நன்றி சொன்னாள். பின்பு, அவள் வருத்தமோ கவலையோ எதுவுமற்றவள் போல நிதானமாக நின்றிருந்தாள். தானாகவே நடந்து போய் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டாள். அங்கிருந்த காவலாளிகளை நோக்கி நன்றி சகோதரர்களே என்றாள். அவர்கள் முகத்தில் சலனமேயில்லை.  தூக்குக்கயிறு அவள் தொண்டையை இறுக்கும் போது கடைசியாகப் பார்த்த நட்சத்திரம் மனதில் தோன்றி ஒளிர்ந்தது”.(ப.275-276).

மன்னராட்சியில் அந்தப்புரத்தின் பலதரப்பட்ட நிலைப்பாடுகளை, செயல்பாடுகளை நாவலில் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப்புர நிர்வாகத்தை கவனிக்க திருநங்கைகள் முக்கிய பங்காற்றினார்கள். பேரரசனின் படுக்கை அறைக்குள் பணியாற்றும் பெண்களின் நாக்கு துண்டிக்கப்பட்டிருக்குமாம். அரண்மனைப் போலவே அந்தப்புறத்திலும் பொறாமை, வெறுப்பு, கசப்பு, விரக்தி, வெறுமை, கோபம் – இப்படி அனல் வீசுமாம். காரணம் பல மனைவிகள், பல வைப்பாட்டிகள் உண்டு. மன்னர் உறவு கொள்ளும் பெண்களுக்கான நாள், நேரம் ரிக்கார்டுகள் கூட பராமரிக்கப்படுமாம். இப்படி பல விவரங்கள் சுவாரஸ்யமான விவரங்கள் மன்னராட்சி என்பதால் வேசியர்கள் விடுதிகள் பற்றியும் கதை ஓட்டத்தில் விவரங்கள் அறிய முடிகிறது. அப்படி ஒரு வேசியர் விடுதி ஒன்றில் ஒரு உரையாடலில் குலாபி என்கிற பெண் தன் அனுபவத்தை இப்படி சொல்லுகிறாள். காமவசப்பட்ட நிலையில் இந்த உலகில் எல்லா ஆண்களும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள். கிழட்டுப் பசு புல்லை மேய்ந்த கதைதான் என்று சலித்துக் கொள்கிறார்.

நாவல் முழுக்க உரையாடல்கள், தத்துவ விசாரணைகள், நீதிமுறை சார்ந்த கருத்துக்கள் என வாசக சிந்தனைக்கு நிறைய வேலை அளித்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். வரலாறு என்பதே நீண்ட உரையாடல்களின் கதை வடிவமோ என்று நம்மை சிந்திக்க வைக்கிறார். அஜ்யா பேகம் தன்னை திருநங்கையாக உணரும் தருணங்கள் கவித்துவமாக வடிக்கப்பட்டுள்ளன. சாதாரண திருநங்கை எப்படி மாமன்னரின் அந்தப்புர மஹல் தாராக பதவி உயர் பெற்றார் என்பதை நாவல் தனது போக்கில் விவரிக்கிறது.

 யாருடனோ உரையாடும் தொனியில் இந்த நாவலின் நடை இருக்கிறது  எந்த முன்மாதிரியும் இல்லாத, ஆனால் வரலாற்றை முன்வைத்துச் சமகாலத்தை நோக்கும் ஒரு கதையாகவே இடக்கை நாவலைப் பார்க்கமுடிகிறது.


(இடக்கை நாவல் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக முதல் பதிப்பு ஏப்ரல் 2016- லும், இரண்டாம் பதிப்பாக ஜனவரி 2017-லும் வெளிவந்துள்ளன. 360 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய்400/-.)

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்