திருமந்திரத்தில் திருநர் பிறப்பியல் சிந்தனைகள்
திருமந்திரத்தில் திருநர் பிறப்பியல்
சிந்தனைகள்
------முனைவர் கி. அய்யப்பன்
முன்னுரை
தமிழ்ச் சமூகத்தில் இன்றும் விளிம்புநிலையில் திருநர் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் இலக்கியங்களில் இவர்களைப் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் இவர்கள் அலி, பேடி, பேடு முதலிய பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சைவ இலக்கிய நூலான திருமந்திரத்திலும் திருநரின் பிறப்பு பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருநர்
பற்றிய அடிப்படை விளக்கங்களுடன், திருமந்திரத்தில்
திருநர் பிறப்பு பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது.
பேடி+பேடன்=பேடு
பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை
கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர்
முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும்
உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும்
பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின்
குறிப்புரை கூறுகின்றது.
ஆணலி+பெண்ணலி= அலி
ஆண்மை திரிந்த பெயராவது பேடி. அச்சத்தி ஆண்மையிற்
திரிந்தாரைப் பேடி யென்ப வாகலான். “தெய்வசிலையார் அலி மூவகைப்படும் என்கிறார். ஈண்டு அப்பெயர்
பெற்றது அலி யென்று கொள்க. அலி மூவகைப்படும்: ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம்,
பெண்ணுறுப்பிற் குறைவின்றி பெண்டன்மைஇழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித்
தாடிதோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது” (தொல்காப்பியம்,
சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). “பெண் தன்மையிலிருந்து பிறழ்ந்து
ஆண் தன்மையை அதிகம் பெற்றவர்களை அலி என்ற சொல் குறிக்கிறது’ (முனிஷ், 2013: 60)) என்று
கூறும் முனிஷின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏன் எனில் அலி என்பவன்,
பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை உடையவன். இது ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும். ஆணுருவம்
இருந்தால் ஆணலி எனவும், பெண்ணுருவம் இருந்தால் பெண்ணலி என்றும் சொல்வதுண்டு (sambasivampillai,
1931: 125). மேற்கண்டவற்றின் அடிப்படையில், பெண்தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மை
அதிகம் பெற்றவர்களையே அலி என்று கூறும் முனிஷின் கருத்து சரியானவையாகத் தோன்றவில்லை.அவர்களை
ஆணலி என்று கூறுவதே சரியானதாகும்.
அலி= பேடு
முன் சொல்லப்பட்ட அலி, பேடுக்கான விளக்கங்கள் அடிப்படையில்
அலி, பேடு சொற்கள் ஒரே பொருண்மையைக் குறிப்பதாகவே உள்ளதைக் காணமுடிகிறது. ஆணலி+பெண்ணலி=
பேடி+பேடன்=அலி,பேடு என்று கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அரவாணி- திருநங்கை
அரவாணி என்னும் பெயர் 12-05-1997 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயரை
வைத்தவர் ஆர். இரவி அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். திருநங்கை எனும் பெயர் திருநங்கை நர்த்தகி நடராஜ்
அவர்களால் 2006ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
திருநர்
இப்பெயர்களும் மாறி தற்போது ஆணாய் பிறந்து பெண்தன்மை
அதிகம் உள்ள பேடியரை திருநங்கை என்றும், பெண்ணாய் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள
பேடரை திருநம்பி என்றும் அழைக்கின்றனர். திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.
இந்த புரிதலை அடிப்படையாகக் கொண்டு
திருமந்திரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அலி, பேடு என்ற சொற்கள் திருநரைக் குறிக்கும் என்பது தெளிவு.
திருமந்திரம்
இந்நூல்
திருமூலரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் சைவசமயம் சார்ந்த நூலாகும். இதன் காலம் கி. பி. ஐந்தாம்
நூற்றாண்டு. இந்நூல் சைவத் திருமுறைகளுள் பத்தாவதாக இடம்பெற்றுள்ளது. மூவாயிரம்
பாடல்கள் உடையது. சராசரியாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகளாகவும், ஒவ்வொரு வரியும் நான்கு
சொற்களைக் கொண்டதாகவும், மொத்தம் 192000 சொற்களையும் கொண்டுள்ளது. திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு
பிரிவும் ஒரு ‘தந்திரம்’ என குறிப்பிடப்படுகிறது. இதில் இரண்டாம் தந்திரத்தில் 471, 472, 476 ஆகிய
மூன்று பாடல்களில் திருநரைக் குறிக்கும்
அலி எனும் சொல்லின் வாயிலாக திருநரின் பிறப்பு பற்றி பேசுகிறது. மேலும், ஏழாம் தந்திரத்தில்
1872 ஆவது பாடலில் இறைவனை வழிபடும்
இடத்து திருநரைக் குறிக்கும் பேடு என்ற சொல்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண் பெண்
திருநர் பிறப்பு பற்றி திருமந்திரம்
திருமந்திரம் சைவ சமயம்
சார்ந்த நூலாக இருந்தாலும் மனித வாழ்வின் இயல்புகளை
கூறுவதாகவும் அமைகிறது. இதன் அடிப்படையில் ஆண், பெண் மற்றும் திருநர் பிறப்பு பற்றியும்
பேசுகிறது.
“மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன்
ஆண்மையே”
(திருமந்திரம்,
இரண்டாம் தந்திரம் : 471)
பெருமைக்குரியதான
பரம்பொருள் ஒன்றியிருக்கின்ற இந்த உடம்பிலிருந்து வளர்கின்ற உயிர்ப்பான நெருப்பை ஆண்
என்றும், பெண் என்றும், இரண்டும் அற்ற திருநர் என்றும் வேறுபடுத்திப் பிரித்தறிய முயலுவது
வெறும் கற்பனையே என்றும் அப்படி வளர்கின்ற உயிர்கள் அந்தந்த உயிர்களின் தாய், தந்தையின்
தன்மைகளையே கொண்டிருக்கும்படி உடலைப் படைத்துள்ளது ஒளி வடிவமாகிய பரம்பொருளின் வல்லமையே
என்றும் இப்பாடல் பதிவு செய்கிறது.
“ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற்
பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில்
அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும்
இல்லையே”
(திருமந்திரம்,
இரண்டாம் தந்திரம் : 472)
உடலுறவின்போது ஆணிடம்
தோன்றும் சுக்கிலம் அதிகமானால் பிறக்கின்ற குழந்தை ஆணாக இருக்கும் (ஆண்மிகும்) என்றும்
பெண்ணிடம் உண்டாகும் சுரோணிதம் மிகுந்தால் பிறக்கின்றது பெண் குழந்தையாகும் என்றும்
சொல்கிறது. மேலும், இந்தச் சுக்கிலம் சுரோணிதம்
இரண்டும் சமமாகக் கலந்து தோன்றினால் பிறப்பது திருநராகும் என்றும் ஆணின் முயற்சி உடலுறவின்போது
அதிகமானால் உலகம் முழுதாளும் வல்லமை உடைய குழந்தை பிறக்கும் என்றும் ஆணின் விந்து தண்மையதாகக்
கெட்டிப்பட்டதாயின் அது வெளிப்பட்டுப் பெண்ணின் சுரோணிதத்துடன் சேர்ந்தும் பயனில்லை
என்றும் இப்பாடலில் பதிவு செய்யப்பட்டுளதை காணமுடிகிறது.
“குழவியும்
ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே”
(திருமந்திரம்,
இரண்டாம் தந்திரம், 476)
உடலுறவின் போது,
ஆணுக்கும் பெண்ணுக்கும் மூச்சுக்காற்று வலது பக்க மூக்கு வழியாக வெளிப்பட்டால், பிறக்கின்ற
குழந்தை ஆணாகப் பிறக்கும் என்றும், ஆண், பெண் இருவருக்கும் மூச்சுக்காற்று இடப்பக்கம்
வெளிப்பட்டால் பெண் குழந்தை பிறக்கும் (அபானன் - மலக்காற்று) என்றும் கூறுகிறது. அயனவாயு
எதிர்த்து வந்தால், சுக்கிலம் சிதறி இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்றும் கூறுகிறது.
மேலும், இப்பாடலில் இருவருக்கும் இடப்பக்க மூச்சுக் காற்றும், வலப்பக்க மூச்சுக் காற்றும்
சமமாக இருக்குமானால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும் என்றும் கூறுகிறது. அதே
சமயத்தில் மானிடப் பிறப்பில் ஆண், பெண்ணுக்கு அடுத்த நிலையில் திருநரின் பிறப்பும்
இயற்கையான ஒன்றுதான் என்பதை திருமந்திரம் வழி அறியமுடிகிறது.
இறைவனின்
வடிவங்களை கூறுமிடத்து திருநர்
இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள். திருமந்திரம் இறைவனின்
வடிவத்தை பேசும் இடத்து ஆண், பெண் அல்லாதவன் என்று கூறும். அடுத்ததாக பேடு அல்லாதவன்
என்கிறது. இப்பதிவின் மூலம் திருநங்கையர் சமூகத்தில்
இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. அதே சமயத்தில் திருமந்திரம் மானிடர்களான
ஆண், பெண்ணுக்கு அடுத்த நிலையில் உள்ள திருநரையும்
மானிடர் என்ற நிலையிலே பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.
“பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறிஞனாக்
கண்இன்றிக் காணும் செவிஇன்றிக்
கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே”
(திருமந்திரம்,
ஏழாம் தந்திரம், 1872)
இறைவன் ஆணல்ல, பெண்ணல்ல,
இரண்டும் இல்லாத தன்மையின திருநரும் அல்ல. அறிவும் மனமும் செயலற்று, நிற்கின்ற நிலையில்
மனத்துள்ளே உதித்தெழும் சோதிஒளி, எல்லோராலும் எளிதில் அறிய முடியாதது. அது அறிவால்
உணரப்படும் பொருள். கண்ணில்லாமல் காணும். அது மனத்தால் அறியப்படும் பொருள். எவை காதின்றிக்
கேட்கும்? இத்தகைய ஆற்றலாளனை பரம்பொருளின் ஆற்றலை உணர்ந்தறிவதே ஞானத்தின் முதிர்வு
என்று இப்பாடலில் கூறப்படுகின்றது.
இறைவன்,
பெண், ஆண், திருநர் என்ற பாகுபாடு உடையவன் அல்லன். அண்டகோசத்தால் மூடியிருக்கும் போது
உள்ளே உள்ள அச்சோதியை எவராலும் அறிதற்கு இயலாது. கண்ணான கருவி இல்லாமலேயே காணும்.
செவி இல்லாமல் கேட்கும். சோதிக்குள் சோதியாய் விளங்குவான். அத்தகைய சிவத்தின் பெருமையை
ஆராய்ந்து அறிவதே முதிர்ந்த ஞானம் என்று கூறுகிறது.
முடிவுரை
திருமந்திரம் இறைவனை வழிபடும் இடத்து ஆண், பெண்ணிற்கு அடுத்த
நிலையில் திருநரை(பேடுவை) கூறுகிறது. பக்தி இலக்கியங்களில் இறைவனை வழிபடும் இடத்து ஆண்,
பெண்ணுக்கு அடுத்த நிலையில் அலி வடிவமாய் (தேவாரம், அப்பர், 2895. நாலாயிர திவ்ய பிரபந்தம்,
2245, நம். திருவாய். 2.5.10) வழிபடும் மரபிலிருந்து வேறுபட்டு ஆண், பெண்ணிற்கு அடுத்த
நிலையில் அலிக்கு பதிலாக பேடு (பாடல் எண்: 1872) என்று திருமந்திரம் குறிப்பிடுவதன் மூலம் இக்கட்டுரையில்
முன்பே கூறியுள்ளபடி அலி, பேடு என்பதன் பொருள் ஒன்றே என்பது இதன் மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது.
தற்காலத்தில் திருநர் தங்களை சமூகத்தின் அனைத்து நிலையிலும் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க
வேண்டும் என்று போராடி வருகின்றனர். தில்லி உச்ச நீதி மன்றமும் 15-04-2014 அன்று வழங்கியுள்ள
தீர்ப்பில் திருநரை(Transgender) மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து அனைத்து இடங்களிலும்
உரிய அங்கீகாரம் கொடுக்க ஆனை பிறப்பித்துள்ளது. ஆனால், பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய திருமந்திரம்
திருநரை ஆண், பெண்ணுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கிறது. மேலும், திருநர் பிறப்பும்
ஆண், பெண் போன்றே இயற்கையானதே என்பதை தெளிவு படுத்துகிறது.
திருநர் தோன்றும் விதம் பற்றி திருமந்திரத்தின் 471, 472,
476 ஆகிய பாடல்களில் விளக்கப்படுகின்றன. பல துறைகளிலும் அறிவியல் வளர்ந்து விட்ட இக்காலத்திலும்
திருநர் பிறப்புப் பற்றி சரியான புரிதல் இல்லாத நிலையில் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு
முன்பே திருமந்திரம் ஆண், பெண், திருநர்(அலி)
பிறப்பைப்பற்றி பேசியுள்ளதை தமிழனின் அறிவியல் சிந்தனைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக
கொள்ளலாம். இந்த பின்புலத்தில் திருநரின் பிறப்பு பற்றி சமூகம் தெரிந்துகொள்ள சிறந்ததொரு
ஆதாரமாக திருமந்திரம் விளங்குகிறது.
உதவிய நூல்கள்
மாணிக்கவாசகன்,
ஞா (விளக்கவுரை), 2006, திருமூலர் திருமந்திரம்,
உமா பதிப்பகம்
சென்னை.
இராமலிங்க
தம்பிரான் சுவாமிகள் (பதிப்பாசிரியர்), 1974, திருமந்திரம், முதல் மூன்று தந்திரங்கள்,
தருமை ஆதினம், தருமபுரம்.
தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனவரையம்,1956, கழக
வெளியீடு, சென்னை.
தொல்காப்பியம்,
சொல்லதிகாரம்- தெய்வசிலையார் உரை,1929, கரந்தை தமிழ்ச்சங்க பதிப்பு, கரந்தை.
முனிஷ்.வெ.,
2013, காலந்தோறும் தமிழ் இலக்கணங்களில் மூன்றாம் பாலினம், சொல்லங்காடி, சென்னை.
Sambasivampillai,
T.V., 1931, Tamil- English Dictionary, The Research Institute of Siddhar’s
Institute of Science, Chennai.
http://orinam.net/ta/resources-ta/family-and-friends-ta/terminology
ta/#sthash.PcU60GeK.dpuf
https://ta.wikipedia.org/s/1due
வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதிவிடுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு