மரப்பல்லி நாவலில் பெண் ஓரினப்பால் சித்திரிப்பு

முனைவர் கி. அய்யப்பன் 

யற்கையை மீறியும் இயற்கையான நிகழ்வுகள் நடந்தேறுவதுண்டு. வேற்று பால் இனத்தின் மீதான ஈர்ப்பு பொதுவானது. ஆனால் ஒரே பால் இனத்தின் மீது ஈர்ப்பு கொண்டு அதனை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதும் இயற்கையை மீறிய ஒரு இயற்கை நிகழ்வுதான். ஓரினச்சேர்க்கையை பலரும் ஆதரிக்கக் காரணமும் அதுதான். அவரவரது விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்குள் இது அடங்குகிறது. ஓரினச்சேர்க்கை குறித்து தமிழில் முதல் முதலாக கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்தான் பேசியது. கணேசன் என்னும் பாத்திரம் ஒருவருக்கு ஓரினச்சேர்க்கையாளனாய் இருந்தது என்று மேலோட்டமாய் மட்டுமே பேசியது. இதையும் தாண்டி அழுத்தமாய் பெண் ஓரினச்சேர்க்கை குறித்து பேசியிருக்கிறது மரப்பல்லி நாவல்.

நூலாசிரியர் குறிப்பு

வா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்திற்கு அருகிலிருக்கும் வாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். 1985-ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், மண்ணின் மக்கள் பேசும் மொழியுடன் நவீன மொழியைக் கலந்து, தனக்கேயுரிய பகடி மூலம் படைப்பின் உன்னதத்தைக் கண்டடைகிறார். கோமு நவீனக் கவிதைகளிலும் ஈடுபாடு கொண்டு எழுதினாலும், சிக்கனமான வடிவத்தில் எழுதும் சிறுகதைகளில் இவர் பேசும் விளிம்புநிலை மக்களின் அந்தரங்க யதார்த்தம் ஜி. நாகராஜனை நினைவூட்டக் கூடியது



எனினும் தனக்கேயுரிய இலக்கியச் செயல்பாட்டில் பிடிவாதமாக இருக்கும் இந்த இளம் படைப்பாளி, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் "நடுகல்' என்ற சிற்றிதழையும், பின்னர் "இறக்கை' என்ற சிற்றிதழையும் நடத்தியவர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது. கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதுவது ஒருவகை, கொச்சையான கதையம்சம் வைத்து எழுதுவது இன்னொரு வகை. வா.மு. கோமுவுடையது இரண்டாவது எனலாம்.

 

எழுதிய நூல்கள்

வா. மு. கோமு இதுவரை அழுவாச்சி வர்துங் சாமி (சிறுகதைத் தொகுப்பு), அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள், மண்பூதம் - சிறுகதைகள், சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள், கள்ளி - நாவல், சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - நாவல், மங்கலத்து தேவதைகள் - நாவல், எட்றா வண்டியநாவல், தவளைகள் குதிக்கும் வயிறுசிறுகதைகள், கூப்பிடுவது எமனாக இருக்கலாம், 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம், பிலோமி டீச்சர்சிறுகதைகள், நாயுருவி - நாவல், மரப்பல்லி நாவல், சயனம் - நாவல், என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்சிறுகதைகள், சகுந்தலா வந்தாள்நாவல், அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு, ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி - நாவல், பக்கத்து வீட்டு குதிரை சிறுகதைகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மரப்பல்லி - விளக்கம்

பாலியல் எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்ட வா. மு. கோமுவின் படைப்புதான் இந்த மரப்பல்லி. ஓரினச்சேர்க்கை புரியும் உயிரினங்களில் மனிதன் மட்டுமல்லாது மரப்பல்லியும் ஒன்று. மரப்பல்லி என்பது உலகெங்கும் உள்ள மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் பல்லி ஆகும். என்று விக்கிபீடியா இணையப் பக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் இந்நாவலுக்கு இது காரணப்பெயராக வைக்கப் பெற்றிருக்கிறது. எனக்கு வேறு மாதிரியான அர்த்தம் தோன்றுகிறது. ஒருபால் உறவு என்பது மரத்தால் செய்யப்பட்ட உயிரற்ற பல்லியை போன்றது என்று அர்த்தத்தில் எழுதியிருப்பதாக தோன்றுகிறது. எதிர் வெளியீடு,160 பக்கங்கள், 2013, ரூ.150, அட்டகாசமாக ஹார்ட் பவுண்ட் செய்யப்பட்டு, புக்மார்க் எல்லாம் வைக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது.

கதை

கதை மணிபாரதியிடமிருந்து துவங்குகிறது. ரம்யா என்கிற மகளை தாரை வார்த்து விட்டு ஒரு விபத்தில் மணிபாரதியின் மனைவி சாந்தி செத்துப்போனதாக தொடங்கும் நாவலில், மணிபாரதியோ வேறு எந்த பெண்ணையும் மணக்காமல் தன் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறான். அப்போது அவனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகின்றனர். ஒன்று பக்கத்து வீட்டுக்காரி வசந்தி, இன்னொன்று ரம்யாவின் வகுப்பாசிரியை சந்திரிகா. இருவரது வருகையும் மணிபாரதியை பழைய நிலைக்கு திரும்ப வைப்பது போலான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்க, வசந்தியின் தங்கை ப்ரியா பணிபுரியும் பனியன் கம்பெனியின் மேனேஜர் ஜெனி என்னும் பெண்ணுடன் நெருக்கம் கொண்டு ஓரினம் என்பதை பொருட்டில் கொள்ளாது அவளைக் காதலிக்கிறாள். சாதகம் விளைவித்த பாதகத்தால் இன்னும் திருமணமாகமலிருக்கும் ப்ரியாவை மனைவியை இழந்து தவிக்கும் மணிபாரதிக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவெடுக்கிறார்கள். ப்ரியாவோ ஜெனியின் காதலில் இருந்து மீளாமலும் மணிபாரதியையும் நிராகரிக்காமலும் இரண்டுக்கும் இடையிலான ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள்.



ஓரினச்சேர்க்கை பற்றி மையமாக பேச வேண்டிய கதையோ சிறிதளவு மட்டுமே அதைப் பற்றி பேசி விட்டு மணிபாரதியின் காமக்களியாட்டங்களைப் பேசத் துவங்கி விடுகிறது. ஆம், கதையின் மையக் கதாப்பாத்திரமான ப்ரியாவின் அக்கா வசந்தி மற்றும் மணிபாரதி மகளின் வகுப்பாசிரியை சந்திரிகா இருவரிடமும் மணிபாரதி நிகழ்த்தும் காம வேட்டை குறித்து நாவல் பேசுகிறது. வசந்திக்கு காங்கேயத்தில் கட்டிக்கொடுத்த கணவனோ உடலுறவு கொள்வதற்கு லாயக்கற்றவன். சந்திரிகா டீச்சரின் கணவனோ முழு நேரக்குடிகாரன். இந்த இரு பாத்திரங்களுமே கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள். அதாவது கதைப்படி காமத்திற்கு ஏங்குபவர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்றழைக்கும் வசந்தியோ மணிபாரதி தன்னை காமத்திளைப்பில் மூழ்கடிக்க வேண்டும் என நினைக்கிறாள். குடிகாரக் கணவனின் தர்ம அடியிலிருந்து தப்பி ஓடி வந்த சந்திரிகா தன் வீட்டு உரிமையாளரின் பருந்து பார்வையிலிருந்து தப்பிக்க நினைப்பவள் மணிபாரதியின் கழுகுப்பார்வைக்கு இரையாகிறாள். ப்ரியாவை காதலிப்பதாகக் கூறிக்கொண்டிருந்தவன் திடீரென அவள் மீது மூர்க்க வெறி கொண்டு அவளை கடித்துத் தின்பவன் போல பலாத்கார முயற்சியில் இறங்கிய போது ஒன்று புரியாமல் கிறக்கத்தோடு நின்றிருக்கையில் அவனைத் தாக்கி விட்டு ப்ரியாவைக் காப்பாற்றுகிறாள் ஜெனி. அவன் நடத்திய மூர்க்கத்தனமான காமவெறித்தாக்குதாலால் ஆண் சமூகம் மீதே வெறுப்புறுகிறாள் ப்ரியா. அச்சமயத்தில் ஆறுதல் தரும் ஜெனி, ப்ரியாவுக்கு முத்தங்களைப் பரிசளிக்கிறாள். அவளின் அந்தரங்கத்தோடு தனது அந்தரங்கத்தை ஒட்டி உறவாடுகிறாள். இதெல்லாம் தப்பில்லையா என ப்ரியா வினவும்போது உனக்கு நல்லாருக்கல்ல அப்ப எதுவும் தப்பில்லை என அவளை ஆறுதல் படுத்துகிறாள்.

யாரேனும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மார்பகங்கள் வளருகின்றனவா? யாரேனும் பார்த்து ரசிக்கவே உடை வகைகளை அணிவதாக நினைத்துக் கொண்டவர்கள் தானா நெருங்கி வந்து கட்டியணைக்கிறார்கள்? இது வெறும் உடலியல் அடிமைத்தனமாக இருக்கிறது ஜெனி. இதைத் தாண்டினால் வருவது ஒருவேளை அது நிஜமாகவே காதலாய் இருக்கலாம். அதைத்தான் நான் உங்களிடம் உணர்ந்தேன் ஜெனி”(ப. 58)

அவனுக்கான காரியம் முடிந்து விட்டதும் என்மீதான பற்றுதல் போய்விட்டது அவனுக்கு. அதற்கு காரணம் நானுமல்ல அவனுமல்ல! அவனது குறி. அது என்னையும் அவனையுமே ஏமாற்றி இருக்கிறது. ஜெனி உலகில் நடக்கும் கொடூரங்களுக்கெல்லாம் காரணமாய் ஐந்து நிமிடம் விரைப்பேறிய குறிகளே தான் காரணமா? ஒருவார காலம் அவன் இதற்குத்தானா ஆசைப்பட்டான்? வெறும் ஐந்து நிமிடங்களுக்காக? இதில் அவனும் எந்தவிதமான திருப்தியையும் கண்டது மாதிரி அவன் பேச்சும் இல்லை. அந்த இரவில் எதுவுமே அங்கு நிகழவில்லை. என்ன நடக்கிறது என்பதை உணருவதற்குள் இங்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல அவன் எழுந்து கொண்டான். எழுந்ததும் வீடு போகலாம் என்று அவன் சொல்லும் போது செத்தும் விட்டான் என்னைப் பொறுத்தவரை”(ப. 59)

ஆணின் காதலில் நான் விழுந்திருந்தால் அவன் இந்த நேரம் என்னை சங்கிலியில் பிணைத்திருப்பான். சிறைக்குள் தள்ளியிருப்பான். என்னோட ஆள் என்று பகிரங்கமாக அறிவிப்பான். மார்பை நிமிர்த்தி மீசையை தடவிக் கொள்வான். முதலில் என் எல்லா சங்கிலிகளையும் உடைத்து வீசினீர்கள் ஜெனி. இவ்வளவு சுதந்திரமாக இருப்பது கூட அழகு தான். சுதந்திரம் அன்பைவிட பெரியது ஜெனி. குழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும். கண்ணாடி டம்ளரை உடைக்கத்தான் செய்யும். நீங்கள் என்னை உடைத்து விளையாடினீர்கள். நானும் அதே விளையாட்டில் குழந்தைமையோடு பங்கெடுத்தேன்”(பக்.  63-64).

அப்போது துவங்குகிறது ப்ரியாவுக்கும் ஜெனிக்குமான காதல். ஒரு பெண் இன்னொரு பெண்ணை எப்படிக் காதலிக்க முடியும்? இது நல்ல கேள்விதான். இதற்குப் பின் வரும் அத்தியாங்களில் விளக்கமான பதிலும் இருக்கிறது. ஜெனியின் வாழ்க்கை என்பது அவளது தந்தை தந்த ஊக்கத்தால் எதற்கும் பயந்திராதவளாகவும், எதற்கும் துணிந்தவளாகவும் தன்னை ஒரு ஆண் என்றே கருதிக்கொண்டு ஜீன்ஸ் பேண்ட் அணிவதும் இரவில் லுங்கி கட்டிக் கொள்வதுமாக இருக்கிறாள். ப்ரியாவை காதல் என்கிற வார்த்தைக்குள் ஆட்படுத்தி அவளிடம் உறவு கொள்ள திருவிழா இரவில் அழைத்துச் சென்றவனோ தன் காரியம் முடிந்ததும் எக்கேடோ கெட்டுப்போ என விட்டுச் சென்று விட்டான். ஒரு பெண்ணின் காமத்தை மட்டுமே ஆண் சமூகம் எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்து ப்ரியா வெறுப்புறுகிறாள். இப்படியாக ஆண் சமூகத்தின்பால் வெறுப்புற்ற இரண்டு பேரும் ஒன்றிணைகிறார்கள்.

ஓரினத்தின் பால் ஈர்ப்பு கொள்ள ஹார்மோன் மட்டுமல்ல சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்பதை இந்நாவல் தெளிவாக விளக்குகிறது. இவர்களுள் ஜெனி தன்னை ஆணாக பாவித்துக் கொண்டு ப்ரியாவை தன் மனைவியாக நினைத்துக் கொள்கிறாள். இந்த ஆண் மனோபாவம்தான் அவளை ஆட்டுவிக்கிறது. யாருக்கும் தான் அடிமையாக மாட்டேன் என சொல்லும் ஜெனியோ தனது தனிப்பட்ட சுதந்திரத்தைத் தாண்டியும் காதலிக்கிறேன் என்று சொல்லி வந்த கதிர்வேலிடம் மூர்க்கமாக நடந்து கொள்கிறாள். ஜெனியின் குற்றங்களை கதிர்வேல் சாடிவிட்டு விடை பெறுகிறான். ப்ரியாவை மணிபாரதிக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவான போது கூட ஜெனி, மணிபாரதியை அழைத்து அதே ஆணாதிக்க மனோபாவத்துடனே பேசுகிறாள். அதாவது ஆணாதிக்கம் என்பது ஆண்களிடம் மட்டுமே அல்ல.

சண்டை, சமாதானம், பொறமை, எரிச்சல், அழுகை, பரிசு, இருட்டு, தடவல் என்று காதலில் எல்லா துன்பங்களும் இருக்கிறது ஜெனி. போயும் போயும் எல்லாம் ஒரு ஆடவனோடு என்றிருக்கையில் எனக்கு அதில் ஒன்றும் இருக்கப் போவதில்லை என காட்டிவிட்டீர்கள்”(5; 58)

அசைவமாக எழுதுவதோ அதை வாசிப்பதோ எனக்கு பிரச்சனை இல்லை. உண்மையில் நான் அதனை விரும்புகிறேன். ஆனால் இந்த புத்தகத்தில் மனித உணர்வுகள், குறிப்பாக பெண்ணின் உணர்வுகள் படுகேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதே என் வருத்தம். போதாத குறைக்கு ஓரினச்சேர்க்கையை பற்றி எந்தவித புரிந்தல்களும் இல்லாமல், மறைமுகமாக அதனை எதிர்த்தும் எழுதியிருக்கிறார் வா.மு. கோமு. ஒருபால் உறவெல்லாம் பேத்தல். பெண்களுக்கு சுகம் வேண்டுமென்றால் at last ஒரு ஆணிடம் தான் பெண் வரவேண்டும் என்று சொல்கிறார். மரப்பல்லியை படித்தால் ஏதோ ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் உடலுறவுக்கு மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக கடைசி சில அத்தியாயங்கள் வக்கிரம். ப்ரியா மனிபாரதியை பிறந்ததிலிருந்து அண்ணா என்றே அழைத்திருக்கிறாள். திடீரென ஒரு சமயத்தில் மணிபாரதி ப்ரியாவை கட்டிப்பிடித்து, உதட்டை கடித்து, பின்புறத்தை பிசைந்ததும் ப்ரியா ஒத்துழைக்கிறாள்.

ப்ரியாவைப் பற்றித்தான் முக்கியமாக பேச வேண்டும். கையறு நிலையில் தனக்கு தோளுக்கு தோளாய் நின்று எவருக்கும் அடிமையாகி விடக்கூடாது என்று சொல்லும் ஜெனியின் உண்மையான காதலோடு வாழ வேண்டும் என ஆசைதான். இருந்தாலும் ஊர் மட்டுமல்ல பெற்ற தாயும் உடன் பிறந்த சகோதரியும் கூட அதை ஏற்றுக்கொள்ள  மறுக்கிறார்கள். மணிபாரதிக்கு திருமணம் செய்து வைக்கத் துடிக்கிறார்கள். மணிபாரதியோடு ப்ரியா பழகிய போது அவனையும் வேண்டாம் என நிராகரிக்க முடியவில்லை. ஜெனியையும் வேண்டாம் என தூக்கி எறிய முடியவில்லை என இரண்டுக்கும் இடையில் நின்று தத்தளிக்கிறாள். ஜெனி மனம் முழுவதும் பரவிக்கிடக்கிறாள். அவள் எப்படியும் தன்னை வந்து கூட்டிச் செல்வாள் என நம்பும் ப்ரியாவோ, ஜெனி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டதும் எவ்வித வருத்தமுமின்றி வருகிறாள். ஒரு உண்மை ப்ரியாவுக்கு புரிகிறது ஜெனியிடமும் தான் ஆண் என்கிற நினைப்பும் ப்ரியா தன்னைத் தேடி வர வேண்டும் என்கிற கர்வமும் ஏகத்துக்கும் பரவிக்கிடந்ததால்தான் இந்த வினை என நினைத்து மணிபாரதியுடன் வாழ சம்மதம் தெரிவிக்கிறாள்.

ஓரினச்சேர்க்கையாளர்களாகவே தங்களது தோளுக்குத் தோளாக ப்ரியாவையும் - ஜெனியையும் வாழ்நாள் இறுதி வரை உலவ விட்டிருக்கலாம்தான். ஓரினச்சேர்க்கையை ஊர் உலகம் ஏற்பதில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்நாவல் ஆசிரியரும் கூட அதை ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டதால்தான் ஜெனியைக் கொன்று மணிபாரதிக்கே ப்ரியாவை வாக்கப்பட வைத்து விட்டார் எனத் தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்தில் ஓரினச்சேர்க்கை குறித்து இது போன்று இதுவரையிலும் எந்த நாவலும் இவ்வளவு அழுத்தமாக பேசியதில்லை என்ற விதத்தில் மரப்பல்லி ஒரு குறிப்பிடத்தகுந்த ஒரு நாவலாகிறது.

( மரப்பல்லி, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி- 642002, 2013, விலை ரூபாய்150/-)

கருத்துகள்

  1. தங்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மிகச் சிறப்பான பார்வை..திருநங்கைகள்/திருநர்கள்/திருநம்பிகள்/பாலியல் தொழிலாளிகள்/ஒரினப் பாலினத்தார்கள் என இவர்கள் அனைவரும் விளிம்புநிலைக்கும் கீழானவர்கள்.
      அதனால் தான் இவர்களை *அதிவிளிம்பு* நிலையினர் என்று நான் பெரும்பாலும் அடையாளப்படுத்திவருகின்றேன்

      நீங்கள் இவர்கள் போன்றோரை மேற்கண்டவாறு அடையாளப்படுத்துவதே

      ஒப்பீட்டளவில்.
      (விளிம்பு ×
      அதிவிளிம்பு)

      பொருத்தமாகவிருக்கும்.ஆகவே,
      உங்கள் இனிவருகிற எழூத்தாக்கங்களில் மேற்குறித்தோரை அதிவிளிம்பு நிலையினர் என்று அடையாளப்படுத்துங்கள் அண்ணா.

      நன்றி.
      வாழ்த்துகள்.
      8/6/2021
      10.45 காலை.

      நீக்கு
    2. சரி தோழர்... தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இடக்கை நாவலில் திருநங்கை சித்திரிப்பு