திருநங்கையர்
தன் வரலாற்று நூல்கள்
-----முனைவர் கி. அய்யப்பன்
தன் வரலாறு எழுதுதல் என்பது ஒருவிதத்தில்
மிகப்பெரிய முயற்சி எனலாம். இவ்வகையான முயற்சி மிக அரிதாகவே செய்யப்படுகிறது. தன்னைப்
பற்றித் தானே எழுதுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல்
விடுவது, எதைச் சொன்னால் தற்பெருமை பேசுவதாகி விடும் என்பது குறித்து கவனமாக இருக்க
வேண்டும். அயல்மொழிகளில் தன்வரலாறு எழுதுதல் என்பது பரவலாக இருக்கிறது. ஆனால் தமிழில்
மிகவும் குறைவுதான். அப்படியே எழுதப்பட்டாலும் நாட்குறிப்புப் பதிவுகள், கடிதங்கள்,
பயணக்கட்டுரை, நினைவுகள், அனுபவம், விமர்சனம், நட்பு என்பது பற்றிய பகிர்தல்களாகவே
இருக்கிறது. இவற்றையும் தன் வரலாறு என்ற வகைமையிலேயே பொருத்திப் பார்க்கலாம். தன் வரலாறு
வடிவத்தில் எழுதப்படுகிறவை காலத்தின் சாட்சிகளாக நம்முன் நிற்கின்றன. இந்தந்த வருடங்களில்
இப்படியாக இருந்தது என்பதைத் தன் வரலாற்றுப் பதிவுகளின் வாயிலாகவே நாம் ஆதாரப்பூர்வமாக
அறிய முடிகிறது.
சமூகத்தில் திருநங்கையர் நாள்தோறும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தினந்தோறும் வேதனை, வலி, இரணங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. இத்தகைய திருநங்கையர் வாழ்க்கையைச் சமூகம் புரிந்துகொள்ள அவர்களின் கதைகளைத் தன்வரலாறாகவும் எழுதத் தொடங்கினர். தமிழில் ஐந்து திருநங்கையர் தன்வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. அவையாவன ரேவதி தொகுத்து 2005-இல் வெளிவந்த உணர்வும் உருவமும் எனும் நூலும் அதனைத் தொடர்ந்து 2007-இல் வெளிவந்த லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய நான் சரவணன் வித்யா எனும் நூலும், ரேவதி எழுதி 2011-இல் வெளிவந்த வெள்ளை மொழி எனும் நூலும், பிரதிபா எழுதி 2018-இல் வெளிவந்துள்ள சுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை, பத்மினி பிரகாஷ் எழுதி ஜூன் 2019-இல் வெளிவந்துள்ள நெருப்பாற்றில் நீந்தி வந்தேன் எனும் நூலும் அறியப்படுகின்றன. இக்கட்டுரையானது இந்த ஐந்து தன் வரலாற்று நூல்களின் வழி திருநங்கையர் வாழ்வியல் ஆராயப்படுகிறது.
ரேவதியின் - உணர்வும் உருவமும்
இந்நூல் திருநங்கையர் சிலரின்
தன்வரலாற்றினைக் கூறுவதாக அமைகிறது. திருநங்கையரின் குழந்தைப் பருவமும் பள்ளிப் பருவமும்
தொடங்கி - பெற்றோரும் சமுதாயமும், தொழில் அனுபவங்கள், காதலும் குடும்ப வாழ்வும், தாய்
நிலை, கலாச்சாரம், விழாவும் வழிபாடும், ஆக்டிவிஸம் முதலிய சமூக நிறுவனக் கட்டுமானங்களின்
மூலம் விளக்கி - அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் எவ்வாறு சிந்தனையிலும் தொழில்முறையிலும்
சமூக - ஊடகப் போக்கிலும் இடம்பெற்று வருகின்றன என்பதையும் எடுத்துக்கூறி, முடிவாக,
அந்தந்த திருநங்கையர் அவரவர் சொல்லும் மொழிவழியாக, புத்தக வடிவில் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
முதன் முதலாக திருநங்கையொருவராலேயே திருநங்கையரின் வாழ்க்கை நிகழ்வுகள் முறைப்படுத்தி
ஆவணப்படுத்தப்பெற்றிருப்பது – இந்த நூலுக்குக் கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம்
எனலாம்.
காதலையும் குடும்ப வாழ்வையும்
திருநங்கைகள் நேசிக்கிறார்கள். ஆணினத்தின்மீது ஆசைப்பட்டால்தான் புதியவர்களைத் தங்கள்
கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். “அரவாணிங்கதான் என்னைத் தேடிவர முடியும்.
ஆம்பளைங்களா வர முடியும்?”(உணர்வும் உருவமும், ப.51) என்ற ஏக்கம் இவர்களை விட்டு முற்றிலும்
மறைய வேண்டுமெனில், உரிய அறிவியல் பார்வையை இவர்கள் பெற்றாக வேண்டும். திருநங்கைகளின் சடங்குகளில் மிக முக்கியமானதான
தாயம்மா நிர்வாணத்தை வாசிப்பதே கூட இத்தனைத் துன்பம் தருமென்றால் அதற்கு உட்படுபவர்கள்
நிலை எப்படிப்பட்டது?(உணர்வும் உருவமும், பக்.90-97) என்பதை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
டாக்டர் நிர்வாணம் சட்டவிரோதமானதால் அதிலும் தனியாரின் சுரண்டல் இருப்பதை பதிவுசெய்கிறது.
இவ்விரண்டுக்கும் 40 நாள் கழித்து ஒரே மாதிரித்தான் சடங்கு என்றாலும் தாயம்மா நிர்வாணத்துக்குத்தான்
திருநங்கைகளிடையே பெருமையும் அங்கீகாரமும் கிடைக்கிறது என்ற செய்தி வியப்பை உண்டாக்குகிறது.
இவ்வாறு இந்நூல் முழுக்க திருநங்கையரின் வாழ்வியல் அவலங்கள் பேசப்படுகின்றன.
லிவிங் ஸ்மைல் வித்யாவின்- நான்
சரவணன் வித்யா
திருநங்கையரும் சாதாரணமாக எல்லாக்
குழந்தைகளையும் போலவே ஒரு குடும்பத்தில் பிறக்கிறார்கள். பதின் பருவமானதும் அவர்களுடலின்
அடையாளம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எண்ணங்களுடன் போராட்டம் ஆரம்பமாகிறது. தமது பாலினத்தை
ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களாகிறார்கள். உடலுக்குப் பொருத்தமற்ற உடையை அணிந்தது போல
அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். அவர்களது வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனை தமது அடையாளத்தை
நிலைநாட்டுதல் என்பதாகிறது.
லிவிங்
ஸ்மைல் வித்யாவின் வாழ்வும், உள்ளதை உள்ளபடியே சொல்லும் எழுத்தும், இலகுவான எளிய நடையும்
அவரை நமக்கு நெருக்கமாக்கிவிடுகிறது. அருகிலிருந்து உரையாடிய உணர்வை ஏற்படுத்துகின்றது.
இப்படி ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். சோகங்களும் புறக்கணிப்புகளும்
அவர்கள் சந்திப்பவையாகும். ஆனாலும் தமது சுயத்தை நிறுவிய திருப்தியுடன் வாழ்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களின் மனதில், எங்கோ ஒரு மூலையிலாவது திருநங்கையர் பற்றிய
சிறு ஏளனமோ தவறான அபிப்பிராயமோ இருப்பின் அது மறைந்துவிடும்.
வித்யாவாக ஆகிவிட சரவணன் நடத்திய
போராட்டங்களும், பெற்ற அவமானங்களும், அவ்வப்போது கிடைத்த ஊக்கங்களைக் கொண்டே அவற்றைக்
கடந்திருக்கிறார் என்பதை நினைவுறுத்துகையில் ஏற்படும் பிரமிப்புக்கு அளவே இல்லை. ஒரு
விதத்தில் திருநங்கைகளின் மனோதிடம் மற்ற எந்த ஆண், பெண்ணையும்விட மிக அதிக அளவு இருக்க
வேண்டும். சரவணன் வித்யாவாகிய நிகழ்வு பெரிய கதை போலச் சொல்லப்பட்டிருக்கிறது. தனது
சுயம் எது எனத் தெரிய வரும்போது அதை அடைய ஒரு மனிதன் கையில் எடுக்கும் போராட்டம் எப்போதுமே
சிறிய ஒன்றாக இருக்காது. அதுவே, நடைமுறையில் ஒரு ஆண், பெண்ணாக மாறுதல் என்றால் எவ்வளவு
பெரிய வலிதரும் விஷயமாக அமையும்?. உடல் வலியை விட்டு விடலாம், அவர்களுக்கு ஏற்படும்
மன உளைச்சலில் உடல்வலி என்பது ஒரு பகுதிகூட இருக்காது. இந்த உடல்வலி என்பதையும் மனவலி
என்பதையும் வித்யாவின் அனுபவமாக இப்புத்தகத்தில் உணரலாம்.
ரேவதியின் - வெள்ளை மொழி
திருநங்கையராக மாறிய பல திருநங்கைகளுக்கு
ரேவதி அம்மா வாழ்க்கை ஒரு முன் உதாரணம். அதன் பதிவே இந்தப் புத்தகம். வெள்ளை மொழி எனும்
இந்த நூல் 2010- ஆம் ஆண்டு வ.கீதா மொழிபெயர்ப்பில் த ட்ரூத் அபோட் மி (The Truth
About Me) என்கிற பெயரில் வெளியானது. இதன் தொடர்ச்சியாகக் கன்னடத்தில் பதுக்கு பயலு
என்றும், மலையாளம் மற்றும் தெலுங்கில் ஹிஜரா ஒப்பல ஆத்ம கதா என்றும் மொழிபெயர்க்கப்பட்டது.
கண் தெரியாதவர்களுக்காக ஒலி வடிவத் தட்டும் வெளி வந்துள்ளது.
புறக்கணிப்பு போல மிகப் பெரிய தண்டனையை ஒரு மனிதனுக்கு
மரணத்தால் கூடக் கொடுக்க முடியாது. அப்படி ஒரு தண்டனையைத் தங்கள் வாழ்நாள் முழுக்கத்
திருநங்கையர்கள் அனுபவித்து வருகிறார்கள். எத்தனையோ அவமானங்களையும், கொடுமைகளையும்
தாண்டி இன்று ஒரு சில திருநங்கையர்கள் மட்டுமே ஒரளவு சாதித்திருக்கிறார்கள். அவர்கள்
சாதனை முழுமையடைய வேண்டும் என்றால் இன்னும் சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய
அங்கீகாரமும் வழங்க வேண்டும்.
வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, இரு சக்கர வாகனத்திற்கு
லைஸென்ஸ் வாங்குவது, சொத்துரிமை கேட்பது, திருமணத்திற்கு அங்கீகாரம், வேலை அங்கீகாரம்
என்று எவ்வளவோ சவால்கள் அவர்களைச் சுற்றி இருக்கிறது. அத்தனைச் சவால்களும் இந்த நூலில்
ரேவதி அம்மா வாழ்க்கை மூலம் தெரிகின்றன. இந்தச் சமூகத்தில் ஒரு பெண் சந்திக்கும் பாலியல்
கொடுமைகளை விடத் திருநங்கையர்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகள் மிக அதிகம். பாலியல்
தொழில் அல்லது பிச்சை எடுப்பது ஆகிய இந்த இரண்டு தொழில்களைத் தவிர இந்தச் சமூகம் அவர்களுக்கு
வேறெதையும் விட்டு வைக்கவில்லை. பிச்சை போட்டு ஒதுங்கிச் செல்லும் மௌனமான மக்கள் ஒரு
புறம். இச்சைக்காகத் தேடி வரும் ஆண்கள் இன்னொரு புறம். இரண்டுக்கும் நடுவில் தங்களுக்கான
வாழ்க்கையைத் தேட முடியாமல் தவிக்கின்றனர்.
பிரதிபாவின்
- சுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை
ஆணாகப் பிறந்து, வளர்ந்து, தன்னுள் இருந்த பெண்மையைக் கண்டுகொண்ட சுவேதாவின் வாழ்க்கைக் கதை இது. இதை அவரே நம்மிடம் சொல்வதுபோல எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.
குடிநோய்க்கு ஆளான கணவரிடமிருந்து பிரிந்துவந்து,
இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுக்கத் தனது அம்மா எதிர்கொண்ட துயரங்கள், சுதாகர் என்று
பெயரிடப்பட்டு ஆண் குழந்தையாக வளர்ந்த குழந்தைப் பருவம், பள்ளியில் படித்தபோது தன்னுள்
முகிழ்த்த பெண்மையைக் கண்டுகொண்ட தருணம், கல்லூரி படிக்க வாய்ப்பில்லாத வறுமை நிலை,
வேலைபார்த்துக்கொண்டே அஞ்சல் வழியில் முதுகலைப் படிப்பு வரையிலும் தொடர்ந்த தன்னம்பிக்கை,
தன் இயல்பைத் தாயிடம் வெளிப்படுத்திக்கொள்ள முடியாத மனப் போராட்டங்கள், பெண்ணாக மாற
எடுத்துக்கொண்ட முயற்சிகள், மும்பையில் நடக்கும் உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயம்மா
அறுவைச் சடங்கு பற்றிய விவரணைகள், தன்பாலின உறவாளர்களுடனான அறிமுகங்கள், காதலின் நம்பிக்கைத்
துரோகங்கள், மனம்தளராமல் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு
முன்னுதாரணமாக மாறியிருப்பது, எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமாக இன்னும் அம்மாவின்
நம்பிக்கையைக் குலைக்காமல் ஆணாகவே தொடரும் வாழ்க்கை என்று விரிகிறது சுவேதாவின் வாழ்க்கைச்
சரிதம்.
பத்மினி பிரகாஷின்- நெருப்பாற்றில்
நீந்தி வந்தேன்
திருநங்கையாக இருப்பவர்கள், தற்போது
பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் பத்மினி பிரகாஷ்.
இவர் 2014-ஆம் ஆண்டு முதல் லோட்டஸ் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். நாட்டிலேயே,
ஒரு திருநங்கை, செய்தி வாசிப்பாளராக இருப்பது, இது தான் முதல்முறை. சமீபத்தில், இவரை
பாராட்டி, ஊக்கப்படுத்தும் விதத்தில், 'சென்னை விஸ்வ ஸ்ம்வாத் கேந்திரம்' என்ற அமைப்பானது,
'நாரதர் விருது' வழங்கி கவுரவித்தது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து,
திருநங்கையர் சந்திக்கும், வழக்கமான கேலி, அவமானங்களுக்கு உள்ளானவர் தான். ஆனால், அப்படிப்பட்ட
சம்பவங்களை கண்டு, பயந்து முடங்காமல், ஓடி ஒளியாமல், கேலி செய்தவர்களே, உயர்வாக பேசும்படி
செய்வதையே, லட்சியமாகக் கொண்டார். எந்த மாறுபட்ட சிந்தனைக்கும் இடம் கொடுக்காது, முன்னேற்றம்
ஒன்றையே சிந்தனையில் கொண்டார். தமிழ் மீது இருந்த பற்றால், முதுகலை படிப்பை முடித்துள்ளார்;
இப்போது, இதில் முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். தன்னம்பிக்கை பேச்சாளர், எழுத்தாளர், பரதநாட்டிய
கலைஞர்; வீணையும் வாசிப்பார். இப்படி பன்முகத்திறமை கொண்டதோடு, இதற்கெல்லாம் உச்சமாக,
தற்போது செய்தி வாசிப்பாளராக உள்ளார். 'அமுதசுரபி திருநங்கை புனர்வாழ்வு மையம்' என்ற
அமைப்பின் மூலம், திருநங்கையரின் மேம்பாட்டுக்கு உதவி வருகிறார். திருநங்கையாக இருப்போர்,
குடும்பம் நடத்தலாம் என்பதற்கு ஏற்ப, பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து, குழந்தை ஒன்றை
தத்தெடுத்து வளர்த்து வருகிறார். எப்போதும் சிரித்த முகத்துடன், வணங்கத்தக்க தோற்றத்துடன்
உள்ளவர், திருநங்கை, பத்மினி. இவரது இன்றைய சந்தோஷத்திற்கு பின், கடுமையான உழைப்பும்,
வலியும், வேதனையும் நிறையவே இருக்கிறது.
பத்மினி கூறுகையில், 'நான் கடந்து
வந்த பாதை, கரடு முரடானது; முட்கள் நிரம்பியது; பல்வேறு அனுபவங்களையும் கொண்டது. அத்தனையையும்,
'நெருப்பாற்றை நீந்தி வந்தேன்' என்ற தலைப்பில் நூலாக எழுதி, ஜூன் 2, 2019-இல், கோவையில்
வெளியிட்டுள்ளார். இந்நூலில் இவர் 'இந்த புத்தகம், திருநங்கையருக்கு ஒரு பாடமாக இருக்கும்;
பொதுமக்களுக்கும், திருநங்கையர் பற்றிய பார்வையை மாற்றி அமைக்கும். 'எல்லாரையும் போல,
சாரசரி வாழ்க்கை வாழ்ந்து போக விரும்பவில்லை; வாழ்ந்ததற்கான நல்ல அடையாளத்தை, இந்த
பூமியில் விட்டுச் செல்ல விரும்புகிறேன். உங்கள் வாழ்த்து, என்னை வழி நடத்தட்டும்...
நன்றி!' என்கிறார்.
உணர்வும் உருவமும் நூலானது முதன்
முதலாக திருநங்கையொருவரால் திருநங்கையரின் வாழ்க்கை நிகழ்வுகள் முறைப்படுத்தி ஆவணப்படுத்தப்பெற்றிருப்பது
குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நான் வித்யா எனும் நூலில் சரவணன் வித்யாவாகிய நிகழ்வு பெரிய
கதை போலச் சொல்லப்பட்டிருக்கிறது. தனது சுயம் எது எனத் தெரிய வரும்போது அதை அடைய வித்யா
கையில் எடுக்கும் போராட்டத்தைக் கூறுகிறது. வெள்ளை மொழி நூலானது வாடகைக்கு வீடு எடுப்பதில்
இருந்து, இரு சக்கர வாகனத்திற்கு லைஸென்ஸ் வாங்குவது, சொத்துரிமை கேட்பது, திருமணத்திற்கு
அங்கீகாரம், வேலை அங்கீகாரம் என்று எவ்வளவோ சவால்கள் திருநங்கையரைச் சுற்றி இருப்பதை
இந்த நூலில் ரேவதி அம்மா வாழ்க்கை மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. திருநங்கை, பத்மினி.
இவரது இன்றைய சந்தோஷத்திற்கு பின், கடுமையான உழைப்பும், வலியும், வேதனையும் நிறையவே
இருக்கிறது. அவர் கடந்து வந்த பாதை, கரடு
முரடானது; முட்கள் நிரம்பியது; பல்வேறு அனுபவங்களையும் கொண்டது. அத்தனையையும், 'நெருப்பாற்றை
நீந்தி வந்தேன்' என்ற நூலில் பதிவாக்கியுள்ளார்.
திருநங்கையர் தன் வரலாற்று நூல்களின்
மூலம் ஒட்டுமொத்தமாக அறிந்து கொள்வது, திருநங்கையர் சமூகத்தில் எவ்வாறெல்லாம் அலைகழிக்கப்பட்டு
ஒதுக்கப்படுகின்றனர் என்பதையும், அதனால் அவர்கள் தனி சமூகமாக உருவெடுத்துள்ளதையும்
விவரிக்கிறது. இத் திருநங்கையர் போன்று
பல திருநங்கைகளும் தங்களுக்கான வரலாற்றை எழுதும் போது அவர்கள் பட்ட வேதனைகளையும், அவமானங்களையும்
சமூகம் புரிந்துகொண்டு அதன் மூலம் திருநங்கையர் மீது சமூகத்தின் பரிவு ஏற்படும் என்று
கூறலாம். எனவே சமூகத்தில் திருநங்கையர் பற்றிப் புரிதல் ஏற்பட, திருநங்கையரின் தன்
வரலாற்று நூல்களின் பங்கும் மகத்தானது என்பதை மறுக்கமுடியாது. மேலும் சமூகத்தில் திருநங்கையருக்கு முடிந்த அளவில்
பிச்சை போட்டு ஒதுங்கிச் செல்லும் மௌனமான மக்கள் மனதில் இருக்கும் மனிதத்தை இது போன்ற
புத்தகங்கள் தட்டி எழுப்பும் என நம்புவோம்.
பயன்பட்ட நூல்கள்
பத்மினி
பிரகாஷ், 2019, நெருப்பாற்றில் நீந்தி வந்தேன்,
கோவை.
பிரதிபா,
2017, சுவேதா என்னுள் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை, சென்னை: நக்கீரன் வெளியீடு.
ரேவதி
(தொ.ஆ), 2005, உணர்வும் உருவமும், அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள், புத்தாநத்தம்: அடையாளம்.
ரேவதி,
2011, வெள்ளை மொழி, புத்தாநத்தம்: அடையாளம்.
வித்யா,
லிவிங்ஸ்மைல், 2013, நான் சரவணன் வித்யா, சென்னை: கிழக்கு பதிப்பகம்
தங்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்
பதிலளிநீக்குநல்ல முயற்சி
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்கு